முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் கோரி வரும் காணிகள் அரசுக்கு சொந்தமானதென்றும் யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்களின் பின்னர் இக் காணிகளை கோரி போராடுவதைப் பார்த்தால் பின்னணியில் ஏதோ ஒன்று செயற்படுகின்றதெனவும் ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, கேப்பாப்பிலவு போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேப்பாப்பிலவில் போராட்டம் நடத்திவரும் மக்களிடம் குறித்த காணி தொடர்பான தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் எனவும் அவர்கள் கோரும் இடங்களின் தனித்துவம் தொடர்பில் அங்குள்ள பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அங்குள்ள 243 ஏக்கர் நிலப்பரப்பை மக்களிடம் ஒப்படைத்ததாகவும் வவுனியாவிலும் 16 ஏக்கர் காணிகளை விடுவித்ததாகவும் குறித்த காணிகளின் தனித்துவத்தை நிரூபித்தால் அதனை பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
எனினும் படையினரின் முகாம் அமைந்துள்ள காணியானது அரசுக்கு சொந்தமானது என்பதனை வனப் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது எனவும் மக்களிடம் இதனை தெளிவுபடுத்திய பின்னரும் இவ்வாறு போராடுவதன் பின்புலத்தில் அரசியல் இருக்கலாம் எனவும் ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.