குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனைக் கோரியுள்ளார். காணாமல் போனவர்களின் உறவினர்கள் அண்மையில் வவுனியாவில் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அப்போது வழங்கிய உறுதிமொழிக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் அரசாங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தியிருந்தனர். எனினும், இந்த சந்திப்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பங்கேற்றிருக்கவில்லை.
மாறாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க மற்றும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் காணாமல் போனோர் விடயத்தில் விசாரணை நடத்துமாறு காவற்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதில் வழங்க முடியும் என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்த போது அவர்களை வெளியேறுமாறு மக்கள் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.