கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 11ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை நேற்றைய தினம் தென்னிலங்கை சிவில் அமைப்புகளான தேசிய மீனவ இயக்கம் மற்றும் பங்குத்தந்தைமார், அருட்சகோதரிகள் உட்பட சகோதர மொழி பேசும் மக்கள் அடங்கிய குழுவினர் சந்தித்திருந்தனர்.
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரசாரம் செய்யப்படுவதாக தென்னிலங்கை சிவில் சமூக பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். நேரில் வந்து பார்க்கும் போதே கேப்பாப்பிலவு மக்களின் நிலை புரிகின்றது. ஆனால் தெற்கில் இப்போராட்டம் குறித்து தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளனர். அதேவேளை, கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தாம் உறுதுணையாக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இரவு பகல் பாராது சிறுவர்கள் முதியவர்கள் வரை இங்கு தமது உரிமைகளுக்காக போராடி வருகின்ற நிலையில், மாணவர்கள் வீதி ஓரங்களில் இருந்தபடி தமது கற்றல் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
காணி விடுவிப்பு தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடனான பேச்சுவார்த்தைக்கு கேப்பாப்பிலவு மக்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும், அதனை கேப்பாப்பிலவு மக்கள் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.