177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றுமளவிற்கு சில ஊடகங்கள் காழ்ப்புணர்வுடன் மிக மோசமாக எழுதுகின்றார்கள். என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார்.
மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்ற அனந்தி சசிதரனுக்கு மேடையில் பேச இடம் தரவில்லை என அவர் கண்டனம் வெளியிட்டதாகவும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வைத்து சில அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துவதாகவும் அனந்தி கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அச் செய்தி தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) விளக்கமளித்து உரையாற்றும்போதே அனந்தி சசிதரன் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பெண்களிற்கான உரிய அங்கீகாரம் இல்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்று நான் எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் பெண்களிற்கான உரிய அங்கீகாரம் இல்லை என்பது நிச்சயமாக எல்லோருக்கும் தெரியும்.
தமிழ் மக்கள் பேரவையில் உள்ள ஒரே பெண் உறுப்பினருக்கு பேச சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும் என நான் நம்பினேன். அவருக்கு அச் சந்தர்ப்பம் வழங்கப்படாத நிலையில் அது தொடர்பில் நான் கூறியிருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த ஊடகத்திற்கும் நான் அறிக்கை கொடுத்ததும் இல்லை அவர்களிற்கு பேட்டி வழங்கியிருக்கவும் இல்லை.
ஒரு இயக்கமாக வளர்ந்துவருகின்ற தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போல பெண்களிற்கான அங்கீகாரத்தை வழகவில்லை என்றே நான் கூறியிருந்தேன்.
அறுபது வீதமான பெண்கள் உள்ள நாட்டில் சாதி மத பேதமின்றி அடிமட்டத்திலிருந்து இவ் அமைப்பு பேரியக்கமாகக் கட்டிஎழுப்பப்படவேண்டும் என்றால் அதற்கு பெண்கள் பிரதிநிதித்துவத்தின் பங்களிப்பினை இவர்கள் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது.
ஆனால் எந்த ஒரு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியிலும் நான் அதைக் கூறியிருக்கவில்லை.
பொதுவாக பெண்களிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் எனக் கூறிய எனது கருத்தைத் திரிவுபடுத்தி மிக மோசமாக எழுதப்பட்டிருக்கிறது.
ஊடகங்கள் திரிவு படுத்தி விட்டன.
முதல் முதலாக சுவிஸ் நாட்டில் இருந்து இயங்கும் ஒரு இணையத்தளம் தன்னுடைய விரும்பத்திற்கு ஏற்றது போல தலைப்பையும் போட்டு திரிவுபடுத்தி எழுதினார்கள். நான் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமைக்கு காரணம் குறித்த இணையத்தளம் இலங்கையில் பதிவு செய்யப்படாத சட்டவிரோத இணையத்தளம். அண்மைக்காலமாக இங்கு பதிவு செய்யப்படாத பல இணையத்தளங்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்றமாதிரி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். அதனால் அவர்களிற்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்கமுடியாமலிருக்கின்றது.
ஆனால் அச் செய்திகளை அடியொற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் இரு பத்திரிகைகள் செய்தி பிரசுரித்திருக்கின்றார்கள். பதிவில்லாத இணையத்தளங்கள் ஏதோ எழுதுகின்றார்கள் எதையும் எழுதிவிட்டுப் போகட்டும் என நான் சாதாரணமாக விட்ட விடயத்தை அச்சு ஊடகமாக இங்கு இருந்துகொண்டு குறித்த பத்திரிகைகள் தங்கள் இஸ்ரத்திற்கு செய்திகளைப் பிரசுரிப்பது மிகச் சிரமமாக இருந்தது. எனக்கு காய்ச்சலாக இருந்தபோதும் இச் செய்தியின் பெய்த்தன்மையினனை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்தேன்.
காழ்ப்புணர்ச்சியை நேரடியாக வெளிப்படுத்துங்கள்.
தமிழ் மக்கள் முன்னணி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை நேரடியாக இவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இதற்கு என்னைப் பயன்படுத்துவது இவர்களது ஊடக தர்மமற்ற முறையைக் காண முடிகின்றது.
இதனை ஆரம்பித்துவைத்த சுவிஸ் இணையத்தை நடாத்துபவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரை ஐக்கிய நாடுகள் சபையில் கண்டால் கூட நான் கதைப்பதில்லை. நான் அரசியலுக்கு வந்த கடந்த காலங்களில் என்னை மோசமாக விமர்சித்த ஒருவர். வேறு இடங்களில் தனக்குள்ள விசுவாசத்தைக் காட்டுவதற்காக அவர் என்னைக் கேட்காமலே மிக மோசமாக எழுதி என்னைப் பலிக்கடா ஆக்குவது ஊடக தர்மம் அற்ற விடையம் எனக் கருதுகின்றேன்.
எனக்கு மிக மனவருத்தமாக இருந்தது ஒரு ஊடகம் எழுதுகின்றது என்றால் மற்றைய ஊடகம் எங்களிடம் கேட்க வேண்டும் இவ்வாறு ஒரு செய்தி உள்ளது அது தொடர்பில் எமது கருத்தினை அறிந்து எழுதவேண்டும். இதை அவர்கள் செய்வதில்லை.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகை ஒன்றிலிருந்து தொலைபேசியில் அழைத்து இவ்வாறு கூறினீர்களா எனக் கேட்டபோது நான் மிகத் தெளிவாகக் கூறினேன் இந்த விடையம் தொடர்பாக உங்கள் பத்திரிகைக்கு எந்த ஒரு விடையத்தையும் கூற விரும்பவில்லை எனக் கூறினேன். காரணம் என்னுடைய கடந்தகால மாகாணசபைத் தேர்தலின் போது அந்தப் பத்திரிகை நான் அரசாங்கத்துடன் சேர்ந்துவிட்டேன் என்று கோத்தபாயவின் கருத்துக்களை மிகத் தெளிவாகக் கேட்டு எனக்கு பத்திரிகை போட்டிருந்தார்கள். அதேபோல கடந்த காலங்களின் மிக மோசமாக எழுதினார்கள்.
பெண்களிற்கு எதிராக வன்முறைகள் அதிகரித்திருப்பதா ஒரு கருத்தினை நான் நிகழ்வு ஒன்றில் கூறியபோது ”அனந்தியைப் பார்த்து கண் அடிக்கின்றார்கள்” என மோசமாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
அனந்தி கூறுகின்ற நல்ல ஆக்கபூரவமாக கருத்துக்களை விட்டுவிட்டு பன்னாடை போன்று மேலிருக்கின்ற கழிவுகளை மட்டும் எடுத்து எழுதிவருவது ஊடக தர்மாக இல்லை.
மிக மனவருத்தமாக இருக்கின்றது. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நான் இவர்களின் இவ்வாறான எழுத்துக்களிற்கு எதிராக அடிக்கடி நீதிமன்றத்திற்கோ, பொலிஸ் நிலையத்திற்கோ செல்வது பொருத்தமற்றதல்ல.
இவர்கள் எங்கள் கஸ்ரத்திலும் கவலையிலும் குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றா ர்கள்.
தமிழ் மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அடிப்பதாக இருந்தால் நேரடியாக அவரைத் தாக்கட்டும். அதற்கு ஏன் அனந்தியை இழுக்கிறார்கள்.
மட்டக்களப்பில் வைத்து ஒரு தெலைபேசி வாயிலாக என்னைக் கேட்டார்கள் உங்களை மேடையில் ஏற்றவில்லையா என்று. நான் அதற்கு இல்லை என ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு சென்றுவிட்டேன். ஆனால் அதனை வைத்துக்கொண்டு இவர்கள் பல கதைகள் எழுதியிருக்கிறார்கள்.
நான் என்னை மேடையேற்றவேண்டும் என நினைக்கவும் இல்லை அதனை எதிர்பார்க்கவும் இல்லை. நான் தமிழரசுக் கட்சியின் மகளீர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்பும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கின்றேன். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறித்தான் காணாமல் போன ஒருவருடைய மனைவியாக நான் எழுக தமிழில் பங்குபற்றியிருந்தேன். எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் இருக்கவில்லை.
ஒருவரை அடிக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதாதீர்கள். ஆனால் பெரும்பாலன ஊடகங்கள் இச் செய்தியை வெளியிடவில்லை. அவர்கள் உண்மையை நிலை குறித்து அறிந்துதான் வெளியிடுவார்கள்.
அரசியலில் இருந்து ஒதுங்கிவிட தோன்றுகின்றது.
அரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றும் அளவிற்கு இவர்களது ஊடக எழுத்துக்கள் கொண்டுவந்து விட்டுவிட்டன.
நாங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில்தான் சுவிசிற்குச் சென்றுவருவதாக புதிதாக இப்போது சுவிஸ் இணையக்காரர் எழுதியிருக்கிறார். நான் சர்வதேச நாட்டில் உள்ளவர்களும் அறியும்வகையில் பகிரங்கமாக ஒரு கருத்தினை முன்வைக்கிறேன். அனந்திக்கு வெளிநாடு செல்ல ரிக்கற் போட்டுக்கொடுத்தோம் ஹோட்டல் வசதி செய்து கொடுத்தோம் என எவரும் உரிமை கோர முடியாது.
நாங்கள் மிகச் சிரமப்பட்டுத்தான் அங்கு சென்றுவருகின்றோம். பஸ்சில் செல்ல காசு இருக்காத சூழலில் நடந்துகூட சென்றிருக்கிறோம். அனந்தி அல்சர் நோயையும் சுகர் நோயையும்தான் வெளிநாடு சென்று உழைத்து வைத்திருக்கிறாரே ஒழிய பணம் எதனையும் உழைத்திருக்கவில்லை. மிகப் போக்கிலித்தனமான எழுத்துக்களை நிறுத்தவேண்டும்.என மேலும் தெரிவித்தார்.
Spread the love