குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது, மக்களின் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தனக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முல்லை அரச அதிபர் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார். தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் இந்த விடயத்தை தெரிவிக்கவே, கேப்பாபுலவுக்கு விஜயம் மேற்கொண்டதாக முல்லை அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.