புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்யப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும் உறுதியாக உள்ளார்கள் எனவும் இரு சமூகங்களும் மனப்பூர்வமாக இணைந்தால், அரசாங்கத்திடமிருந்து ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘இரண்டு சமூகங்களுக்குமிடையில் அதிக விட்டுக் கொடுப்புக்கள் தேவைப்படுகின்ற அதேவேளை, இரு சமூகங்களினதும் கௌரவம் பாதிக்கப்படாத வகையில் பரஸ்பர புரிந்துணர்வும் உடன்பாடும் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் பிளவுபட்ட சமூகங்களாக நாம் இருப்பது, இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் ஆபாயம் இருப்பதால், இணக்கப்பாடு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது எனவும் நீடித்து நிலைத்து நிற்கும் சமாதானமும் சகவாழ்வும் நமது இவ்விரு சமூகங்களினதும் தியாகங்களில் தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.