குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைச் சட்டங்களை மீறியே அவுஸ்திரேலியாவில் இலங்கையர்கள் புகலிடம் கோரியுள்ளதாகவும், எனினும் அவர்கள் நாடு திரும்பினால் தண்டிக்கப்பட மாட்டார்கள் எனவும் அனைவரும் மன்னிக்கப்படுவர் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
நாடு திரும்புவதனை விடவும் முகாம்களில் தங்கியிருப்பது மேல் என நினைப்போரின் எண்ணம் தவறானது எனவும், தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் இடம்பெறாத பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புகலிடம் கோரிய அனைவரும் தமிழர்கள் அல்ல எனவும், தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாடு திரும்புமாறு கோருவதாகவும் தெரிவித்த பிரதமர் காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் நாடு திரும்புவோருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.