அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் சகோதரியின் மகனும் அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வி.கே. சசிகலா இன்று காலையில் வெளியிட்ட அறிவிப்பில், 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் அ.தி.மு.கவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் செயலாளராக இருந்த டாக்டர் எஸ். வெங்கடே{ம் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரியதோடு, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டிக்கொண்டதால் அவர்கள், அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் பொதுச் செயலாளர் சசிகலா சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவி கட்சியின் அதிகாரமிக்க பதவியாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.