நல்லிணக்க முனைப்புக்கள் வடக்கு கிழக்கு மக்களை சென்றடையவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை வடக்கு கிழக்கு மக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் நிறுவப்பட்ட போதிலும் இதுவரையில் அது இயங்க ஆரம்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலைமையானது பாரதூரமான பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் யோசனையை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்துவைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாகவும் இதனை தாம் வரவேற்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்திக்கொள்ளப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீள வழங்குவதற்கு அண்மையில் தீர்மானித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.