ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நீதிமன்றில் தனியார் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்த ராமநாதன் கண்ணன் என்பவரை மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் இது, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு நியமித்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் இது பிழையான கூற்று எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையைத் தவிர, சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஒர் அரசியல் கட்சியின் தேவைக்கு ஏற்பவே கண்ணன் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சியொன்றும் சட்டத்தரணிகள் சங்கமும் தலையீடு செய்து இவ்வாறு நீதிபதி ஒருவரை நியமித்தது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பத்தரமுல்லவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.