147
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் மண் மீட்புப் போராட்டம் 18ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. கொதிக்கும் வெயிலிலும் மூசும் பனியிலும் சொந்த நிலத்தை மீட்பதற்காக இராணுவ முகாமை முற்றுகையிட்ட மக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை இலங்கை அரசின் விமானப் படையினர் அபகரித்துள்ளனர். தமது நிலங்களை விடுவிக்குமாறு மீள்குடியேற்றப்பட்ட காலம் முதல் அந்த மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அரசை வலியுறுத்தி வந்தனர்.
தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் தமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவமுகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காணிகள் விடுவிக்கப்படும் என அரசால் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் கூறப்பட்டது.
எனினும் 18 நாட்கள் கடந்தும் அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. ஒரே இரவில் காணிகளை விடுவிக்க முடியாது என்றும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் காணிகள் விடுவிக்கும்வரை தம் நில மீட்புப் போராட்டம் தொடரும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கில் போராட்டங்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கள் கிழமை வரையான கால அவகாசத்தில் காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிழக்கிலும் போராட்டம் இடம்பெற்றதுடன் அந்த மக்களின் காணிகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
Spread the love