சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டிருந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை இம்மாதம் 23ஆம் திகதி, ஜெனீவாவில் ஆரம்பிக்கப்படும் என்று, சிரியாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவர் ஸ்டபான் டி மிஸ்டுராவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த இந்தப் புதிய சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைக்கான, தன்னுடைய 21 பிரதிநிதிகளை சிரிய எதிரணி அறிவித்தமையைத் தொடர்ந்தே, மேற்கூறப்பட்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்னர், மிஸ்டுராவை சந்திக்கும் பொருட்டு, சிரிய அரசாங்கமும் சிரிய எதிரணியும் இம்மாதம் 20ஆம் திகதியளவில், ஜெனீவாவை வந்தடைவர் எனவும் மிஸ்டுராவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.