205
தங்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தக் கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களுக்கா பாராளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்துவதற்கு ஜேவிபி தீர்மானித்துள்ளதாக அதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், ஒரே இரவுக்குள் கேப்பாவிலவு மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது என, நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற அரசின் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களுக்கு தெரியவில்லை யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாக இந்த மக்கள் தங்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரிவருகின்றார்கள். நல்லாட்சி அரசு பதவி ஏற்றபின் மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் என அறிவித்திருந்தார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை.
எனவே இந்த அநீதியான செயற்பாட்டை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்க்கிறது. ஏதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளில் கேப்பாவிலவு மக்களின் பிரச்சினை தொடர்பில் இதுவரை காலமும் இடம்பெறாதது போன்று ஒரு நடவடிக்கையை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொள்ளவுள்ளது.
கேப்பாவிலவு மக்களின் பிரச்சினையை அரசு தீர்க்காது விடின் இந்தப்பிரச்சனை வடக்கு கிழக்கு முழவதும் ஏற்படும் பிரச்சினையாக மாறும். பின்னர் அது நாடு தழுவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்படவுள்ளது. எனவே மைத்திரி அரசிடம் உடனடியாக இந்த மக்களின் பிரச்சினையை தீர்க்குமாறு நாம் கோருகின்றோம் எனத் தெரிவித்தார்.
Spread the love