நாடாளாவிய ரீதியில் தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் முடக்கப்பட்ட ஒரு நிலையே தென்படுகின்றது எனவும் நாட்டின் சுத்தம், சுகாதாரம் உட்பட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத நிலையில், டெங்கு நோயின் தாக்கம் பரவலாக வியாபித்து வருகின்றது மட்டுமல்லாது பல்வேறு நோய்கள் பரவுகின்ற அபாயமும் தோன்றியுள்ளதுடன் பல்வேறு சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன என்பதை சுட்டிக் காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அவை ஒப்படைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது மக்கள் பிரதிநிதிகளின்றி செயற்படுகின்ற உள்ளூராட்சி சபைகள் பலவற்றின் மக்கள் நலன் சார்ந்த பணிகளின் வினைத்திறன்கள் அற்றுப் போயுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் எங்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பாரியளவில் பெருகியுள்ளன. இனந்தெரியாத வைரஸ்களால் ஏற்படுகின்ற நோய்களைக் கூட தற்போது அதிகளவில் தென் பகுதி கிராமங்களிலே காணக்கூடியதாக உள்ளது.
எனவே, தற்போதைய உடனடித் தேவையாக இருப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்துவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைக்கு அமைவாக நடத்த காலதாமதமாகுமெனில், பழைய முறையில் நடத்தப்படலாம் எனவும் அல்லது முன்னைய நிர்வாகிகளிடம் தேர்தல் நடத்தப்படும்வரை சில காலத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களை ஒரு தற்காலிக ஏற்பாடாக ஒப்படைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.