கிளங்கன் வைத்தியசாலை இவ்வருட நடுப்பகுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுவதுடன் மேலதிக இந்திய வீடமைப்பு திட்டம் சாதகமாக பரிசீலிக்கப்படுமென இந்திய வெளியுறவு செயலாளர் உறுதியளித்துள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியோடு 4000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வீடுகளின் தொகை இன்னும் அதி-கரிப்படுவது தொடர்பில் மிக சாதகமாக பரிசீலிக்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணி உறுதி, பயனாளிகளுக்கு பெற்றுத் தரப்படுவதால் இது சாத்தியமாகியுள்ளது எனவும் அதேபோல் நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்த நுவரெலியா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையும் இவ்வருட நடுபகுதியில் உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் எனவும் தொிவித்துள்ளாா்.
வீடமைப்பு, தொழிநுட்ப கல்வி, அடிப்படை கல்வி, அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களில் மலையகத்தில் வாழ்கின்ற பின்தங்கிய தோட்ட தொழிலாளர்களுக்கு இந்தியாவின் ஒத்தாசைகள் பெறப்படுவது தொடர்பாக உறுதி மொழிகளை பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவு செயலாளர் தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் வழங்கியுள்ளார்.
இன்றைய இந்த சந்திப்பின்போது கூட்டணி சார்பாக கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், பிரதித்தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பிரதித்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய வெளியுறவு செயலாளருடன், இந்திய தூதுவர், பிரதி தூதுவர், முதலாம் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.