கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த மிக முக்கியமான ஒருவரின் வழிநடத்தலில் அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை மட்டுமன்றி, பல்வேறு படுகொலைகள், கடத்தல்கள், வெள்ளைவான் கடத்தல்கள், தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாக இந்த இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உண்டு என காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கத்தின் பிரதானி ஒருவரின் தேவைக்கு அமைய இவர்கள் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் இராணுவப் புலனாய்வுப் பணிகளில் ஈடுபடவில்லை எனவும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.