வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு, இளைஞர் அமைப்பொன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியாவை தலைமையாக கொண்டு பரந்த அளவில் செயற்படும் இளைஞர் வலையமைப்பு ஒன்று, வடபகுதியைச் சேர்ந்த 34 பிரதேச செயலகங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பப் படிவங்களை தபால் மூலம் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ளது.
குறித்த விண்ணப்பத்தில், பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியின் அளவு, காணி உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி, தனியாட்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள அரசகாணியின் அளவு, ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணியை இழந்தவர்களின் எண்ணிக்கை, பெயர் விபரம், முகவரி மற்றும் கிராம சேவையாளர் பிரிவு என்பவற்றை காணி சுவீகரிப்பு தொடர்பாக அறியும் நோக்குடன் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தவிர, குறித்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனவர்களின் பெயர், முகவரி மற்றும் குறித்த குடும்பத்துடன் தொடர்புகொள்ளக்கூடிய தொடர்பு இலக்கம் என்பவற்றை கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் தருமாறும், குறித்த குடும்பத்தின் தற்போதைய குடும்ப பிரதானியின் முழுப்பெயரையும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையையும் தருமாறும் இவ் இளைஞர் அமைப்பு கோரியுள்ளது.