பாதுகாப்புத்துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இலங்கை அரசாங்கம் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும் எனினும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 25 முக்கிய விடயங்களில் பாதுகாப்புத்துறைசார் விடயங்களில் மறுசீரமைப்புச் செய்தலும் உள்ளடங்குகின்றதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்து செய்வதற்கு இதுவரையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாதுகாப்புத் துறையில் மாற்றம் செய்வதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
கால மாறு நீதிப்பொறிமுறைமை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் முனைப்பு குறித்தும் கண்காணிக்கப்பட வேண்டுமென மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வாக்குறுதி அளித்து 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இலங்கைத் தலைவர்கள் முக்கிய மனித உரிமை விடயங்களுக்கு தீர்வு காண முனைப்பு காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.