மத்திய பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு ஒன்றை நிறுவியிருந்தார்.
இந்த ஆணைக்குழு நேற்றைய தினம் தற்போதைய மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்திருந்தது.
எனினும், தற்போது இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு விசாரணைகளை தொடர உள்ளதாக ஆணைக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.