புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளபட்டது. அதன் போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதில் 11 ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் தான் அரச தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு சம்மதிப்பதாக தெரிவித்து நீதிமன்றில் சத்திய கடதாசியில் கையொப்பம் இட்டார்.
அதேவேளை 12 ஆவது சந்தேக நபரான த.ரவீந்திரனிடம் வாக்கு மூலம் பெறுவதற்கும் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க எதுவாகவும் , அவரை தமது பாதுகாப்பில் எடுப்பதற்காக குற்ற தடுப்பு புலனாய்வு துறையினர் ,மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
அதனை அடுத்து குறித்த சந்தேக நபரை 22ம் திகதி முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையில் குற்ற புலனாய்வு துறையினர் வாக்கு மூலங்களை பெறவோ விசாரணைகளை மேற்கொள்ளவோ அனுமதிப்பதாக நீதிவான் தெரிவித்தார். அத்துடன் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவு இட்டார்.