முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள கரைத்துறைபற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவில் , கேப்பாபுலவு , பிலகுடியிருப்பு , சூரியபுரம் , சீனியாமோட்டை மற்றும் பிரம்படி எனும் பகுதியில் வசித்த மக்கள் யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தின் பிற்பகுதிகளில் இராணுவ கட்டுபாட்டு பகுதிகளுக்குள் அப்பகுதி மக்கள் செல்ல தொடங்கினர்.
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்ற மக்களை இராணுவத்தினர் வவுனியா செட்டிக்குளம் நலன்புரி முகாம்களில் தங்க வைத்தனர்.
பின்னர் நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்து சென்று மீள் குடியேற்றம் செய்தது.
அதன் போது கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் கீழான மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றாது சீனியாமோட்டை பகுதிக்கு அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் அருகில் இருந்த காட்டு பகுதிகளை துப்பரவு செய்து அந்த மக்களை அங்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத பகுதியில் குடியேற்றினர்.
அதற்கு அந்த மக்கள் சம்மதிக்காத போது உங்களின் சொந்த காணிகளில் வெடி பொருட்கள் உள்ளன அவற்றை அகற்ற வேண்டும். அது வரையில் இந்த இடத்தில் குடியேறுங்கள் என எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காது பற்றை காணிகளை துப்பரவு செய்து கொடுத்து தகர கொட்டைகைகளுக்குள் குடியேற்றினர்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு கால பகுதியில் மஹிந்த அரசின் மீள் குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் இலங்கை இராணுவத்தின் 59ஆம் படைபிரிவினர் தற்காலிகமாக மக்கள் குடியேற்றப்பட்ட பகுதியை கேப்பாபுலவு மாதிரி கிராமம் என பெயர் சூட்டி, அப்பகுதியில் புதிதாக வீதிகளை உருவாக்கி அவற்றுக்கு தமது படை அதிகாரிகளின் பெயர்களை சூட்டி , அப்குதியில் 165 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு ஒரு கிராமத்தையே புதிதாக உருவாக்கினார்கள்.
அவ்வாறு புதிதாக இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு கேப்பாபுலவு மாதிரி கிராமம் என பெயர் சூட்டி பெயர் பலகையும் கிராமத்தின் எல்லையில் நாட்டி இருந்தனர். பின்னர் கடந்த வருடம் அந்த பெயர் பலகையை கேப்பாபுலவு கிராமம் என பெயர் சூட்டியுள்ளனர்.
ஒவ்வொரு வீடும் , 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பெறுமதி 2 இலட்சமும் இல்லை என வீட்டினை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை அங்கு வசிக்கும் மக்கள் தமக்கு இந்த காணியும் வீடும் தேவையில்லை எமக்கு எமது சொந்த இடமே தேவை. என கடந்த ஐந்து வருடகாலமாக போராடி வருகின்றனர்.
அந்த போராட்டத்தின் பயனாக சீனியாமோட்டை , மற்றும் பிரம்படி பகுதிகளில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். சூரியபுரம் பகுதியில் ஒரு பகுதி மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இன்னமும் பிலகுடியிருப்பில் 84 குடும்பங்களும் கேப்பாபுலவில் 145 குடும்பங்களும் குடியேற்றப்பட வேண்டும். அவர்களுக்கு சொந்தமான சுமார் 525 ஏக்கர் காணியினை விமானபடையினர் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தி தமது பாரிய படை முகாமை அமைந்து உள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபுலவு ஊடாக முல்லைத்தீவு செல்லும் வீதியில் தமது படைத்தளத்தின் முன்பாக செல்லும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதியினை பொது மக்களின் பாவனைக்கு தடை செய்து, இராணுவமும் விமான படையினரும் , தமது பாவனைக்கு பயன்படுத்து கின்றனர். இதனால் அந்த பகுதியால் செல்லும் மக்கள் ஒரு கிலோ மீற்றர் தூரத்தினை கடப்பதற்கு சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் காட்டு பாதையால் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறன நிலையில் தமது சொந்த காணிகளை கையளிக்குமாறு கோரி கேப்பாபுலவு மற்றும் பிலாகுடியிருப்பு மக்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கிராமம் இருந்த இடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள பகுதிக்கு இலங்கை இராணுவமும் , விமான படையினரும் இணைந்து மாற்றி உள்ளனர். குறித்த புதிய கிராமத்தில் 165 வீடுகள் , பாடசாலை , கிராம சேவையாளர் அலுவலகம், பொது நோக்கு மண்டபங்கள் , வீதிகள் , மதகுகள் என அனைத்தையும் புதிய இடத்திற்கு இடம்மாற்றி கொடுத்தனர். அதற்காக பல பில்லியன் ரூபாய்க்கள் செலவளித்தும் உள்ளனர்.
இவை எதுவுமே எமக்கு தேவையில்லை எமக்கு தேவை எமது சொந்த நிலமே .. அங்கே எமக்கு எந்த வசதியும் செய்து தர தேவையுமில்லை எம்மை எமது சொந்த இடத்திற்கு செல்ல அனுமதித்தால் எமக்கு தேவையானவற்றை நாமே தேடிக்கொள்வோம். எமக்கு எமது நிலமே வேண்டும் என கோரியே அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா ?