இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரின் அண்மைய இலங்கைப்பயணமானது , தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருக்கவில்லை எனவும் , அது இந்தியாவினுடைய தேசிய நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர்களது பிரச்சினையை விட தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவே இந்தியா அதிக கவனஞ்செலுத்துவதாக தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவுடன் இலங்கை செய்துகொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய ஒப்பந்தம் குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் இலங்கை ஆர்வம் காட்டாமல் இருப்பது தொடர்பிலும் இந்தியாவின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் தெரிவிப்பதே அவரது பயணத்தின் பிரதான நோக்கமாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.