2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாகவும் சம்பளத்தை மீள் பரிசீலனை செய்வதற்காகவும் பேச்சுவார்த்தைகளை நடாத்த இ.தொ.கா. தொழில் அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கமொன்று என்ற வகையில் இ.தொ.கா. அதனை மீள் பரிசீலனை செய்ய முயற்சி எடுப்பதை நாம் வரவேற்கின்றோம். எனினும் இந்த அறிவிப்பானது இதய சுத்தியுடனும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான உபாயமாக இருக்க கூடாது.
தோட்டத் தொழிலாளர்கள் 2016ஆம் ஆண்டு செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர், தாங்கள் முன்னர் பெற்ற 620வை விட குறைவான சம்பளத்தை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் கம்பனி நம்பிக்கை துரோகம் செய்தமையானால் என்று இந்த பிரச்சினையை சுருக்குவதை விடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள அனைத்து விடயங்களையும் மீளாய்வு செய்ய இ.தொ.கா. முன்வர வேண்டும். அதனையே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பாரக்கின்றனர்.
அந்தவகையில், புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்ய இ.தொ.கா. இதயசுத்தியுடனும் நேர்மையாகவும் நடவடிக்கை எடுக்குமாயின் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.
• சம்பள மீளாய்வு பேச்சுவார்த்தைகள் எப்போது தொடங்கும், எப்போது கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் என்பது தொடர்பாக தெளிவான கால வரையறைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
• 2016ஆம் ஆண்டு சம்பள கூட்டு ஒப்பந்ததை இரத்து செய்து 2017 மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்ய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
• 2015ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தொடக்கம் 2016 ஒக்டோபர் வரையான 18 மாதங்களுக்கு வழங்கப்படாது மறுக்கப்பட்ட நிலுவைச் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• வாழ்க்;கைச் செலவுக்கு ஏற்ற நியாயமான சம்பளத்தை உறுதி செய்து, வாழ்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப வருடா வருடம் சம்பள உயர்வு உறுதி செய்யப்படக்கூடிய சம்பள சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• 2003ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்டுள்ள அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள, வருடத்திற்கான 300 நாட்கள் வேலையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• 300 நாட்கள் வேலை வழங்குவதை மறுக்கும் 2016ஆம் ஆண்டு செய்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளியாள் உற்பத்தி முறையை நிறுத்த வேண்டும்.
• 2003ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பிரதான கூட்டு ஒப்பந்தம் 03 வருடங்களின் பின்னர் மற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை திருத்தப்படாதுள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பல புதிய பிரச்சினைகள் உள்ளன அவற்றை எல்லாம் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி பிரதான கூட்டு ஒப்பந்தம் ஒரு குறித்த கால வரையறை மக்களுக்கு குறிப்பிட்டு அக்காலப்பகுதியினுள் திருத்தப்படல் வேண்டும்.
இவ்விடயங்கள் தொடர்பாக இ.தொ.கா தனது நினைப்பாட்டை தோட்ட தொழிலாளர்களுக்கு வெளிப்படுத்தி கூட்டு ஒப்பந்த மீளாய்வு தொடர்பான அவர்களின் முன்னொடுப்புகளில் உள்ள நம்பகத் தன்மையையும் நேர்மையையும் காட்ட வேண்டும்.
கூட்டு ஒப்பந்தம் என்பது அதில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் அங்கம் வகிக்காத தொழிலாளர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்படுகின்றார்கள். எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்காக ஐக்கியப்பட்டு ஒரு பொது கோரிக்கைகளை தொழில் அமைச்சருக்கும் கம்பனிகளுக்கும் முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் இந்த நிலையை ஏற்று செயற்பட முன்வர வேண்டும்.
அத்தோடு தொழில் அமைச்சர் அல்லது தொழில் ஆணையாளர் தோட்டத் தொழிலாளர் சம்பள மற்றும் உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளை நடாந்தும் போது அது தொடர்பாக பெருந்தோட்டத் தொழிற்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அறிவிக்க வேண்டும். எனவே, தொழில் அமைச்சர் அல்லது தொழில் ஆணையாளர் என்போர் தமது கடமையை உரிய முறையில் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
இன்று எவர் மறுத்தாலும் மலையக மக்களின் பெரும்பான்மையினரின் வாழ்வாதாரம் பெருந்தோட்டத் தொழிற்துறையில் தங்கியுள்ளது. அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை நம்பி தோட்டங்களை அண்டிய நகரங்களில் உள்ள வியாபாரிகளின் வியாபாரமும் தொழிற்துறையும் தங்கியுள்ளன. எனவே, மாற்று தொழிற்துறையொன்று மலையகத்தில் கட்டப்படும் வரை பெருந்தோட்டத் தொழிற்துறையையும் தோட்டத் தொழிலாளர்களையும் பாதுக்க வேண்டிய பொறுப்பு அரசியல் தொழிற்சங்க பேதங்களை கடந்து அனைவருக்கும் உள்ளது.
2016ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு இழைத்துள்ள அநீதி காரணமாகவே நாம் நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எனவே, தோட்டத் தொழிலாளர்களும் அவர்களின் உரிமையில் அக்கறைக் கொண்டுள்ள அனைவரும் இந்த சூழ்நிலையை மிகுந்த அவதானத்துடன் அணுகி தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நிலையை உருவாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேம்.
இளையதம்பி தம்பையா
பொதுச் செயலாளர்
மக்கள் தொழிலளார் சங்கம்