கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் பால் கொள்வனவு செய்யும் நேரத்தினை மாற்றுமாறு கோரி இன்று காலை 7.00 மணிக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் பால் கொள்வனவு செய்யும் நிறுவனம் நேர மாற்றத்தினை மேற்கொள்ளுமாறு கிராமத்தின் கால் நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த இடத்திற்குக் கொண்டு வருவதற்கு குறைந்தது காலை 8.00 மணியாவது இருக்க வேண்டும் எனவும் குறித்த நிறுவனம் காலை 7.00 மணிக்கு பாலினை கொள்வனவு செய்து கொண்டு செல்வதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் முழுமையாக பாலினை விற்க முடியாமல் இருப்பதாகவும் எனவே காலை 8.00 மணியளவில் பாலினைக் கொள்வனவு செய்யுமாறு கிராமத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்னேரிக்குளம் கிராமத்தில் தற்போது 500 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் பல குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் தங்கியுள்ளனர். பால் கொள்வனவு செய்யும் நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் பாலினை காலை 8.00 மணிக்கு கொள்வனவு செய்வதன் மூலம் கிராமத்தின் சகல இடங்களில் இருந்தும் பால் கொண்டு வருபவர்கள் தமது பாலினை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பால் கொள்வனவு செய்யும் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தே இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தற்போது வன்னேரிக்குளத்தின் சோலைக் கிராமத்தில் வைத்து காலை 7.00 மணிக்கு பால் கொள்வனவு செய்யப்பட்டு ஸ்கந்தபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக வன்னேரிக்குளம் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்