களுத்துறை வடக்கு சிறைச்சாலை பேரூந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதனையடுத்து உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலில் அம்பாறை காரைதீவு கிராமத்தைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகன் என்பவரும் உயிரிழந்துள்ளார். இவர் அண்மையில்தான் அரசாங்க அலுவலராக நியமனம் பெற்று சேவையில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிச்சூடு: அறுவர் உயிரிழந்தனர்:-
Feb 27, 2017 @ 09:45
களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 5 கைதிகளும், சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
களுத்துறையிலிருந்து கடுவெல நீதிமன்றிற்கு சென்ற இந்தப் பேரூந்தினை வானில் சென்ற குழுவினர், எதனமடல பிரதேசத்தில் வைத்து மறித்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அடையாளம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘சமயன்’ என அழைக்கப்படும் அருண உதயசாந்த உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.