இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த ஜனாதிபதி உலகின் முக்கிய நாடுகளில் இலங்கை பாதுகாப்பு படையினரின் இழந்து போயிருந்த பயிற்சி வாய்ப்புக்களை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடிந்திருப்பதாக குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் அவை அதிகரிக்கப்படுமென்றும் இலங்கை கடற்படையினருக்கு உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்க கடற்படை விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.