மளிகை, பெட்டிக்கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து ஒருசில கடைகளில் வைத்திருந்த குளிர்பானங்களை அழிக்கும் போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.
ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் திரண்ட இளைஞர்கள், மாணவர்களின் கூட்டம் வெளிநாட்டு குளிர்பானங் களின் தயாரிப்பையும் தமிழகத்தில் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள உள்நாட்டு குளிர் பானங்களை வாங்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் வெளி நாட்டு குளிர்பானங்களை முழுமையாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன் இன்று முதலாம் திகதி முதல் அனைத்து கடைகளிலும் வெளிநாட்டு குளிர் பானங்கள் விற்க கூடாது எனவும் அறிவித்திருந்தனர். இதைனையடுத்து வெள்ளையன் தலைமையில் நிர்வாகிகள் இன்று காலையில் பெரம்பூர் பஸ்நிலையம் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கிருந்த வெளிநாட்டு குளிர்பானங்களை தூக்கிவந்து ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.