ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது படுகாயமடைந்தவர்களுக்கு 15 லட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என இந்திய மாணவர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு தொடர்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தாம் கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய போது போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர்; தடியடி நடத்தியதாகவும் இதனால் தங்கள் அமைப்பை சேர்ந்த பலர்; படுகாயமடைந்துள்ளனர் எனவும் எனவே, படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 15 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்றில்; பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி , குறித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.