ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தில் இலங்கையும் இணை அனுசரணை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நல்லிணக்க பொறிமுறை செயலகத்தின் பொதுசெயலாளர் மனோ தித்தவெல இதனைத் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை கோரியுள்ளது. கால அவகாசத்தை வழங்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள இந்த தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரனை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக இலங்கைக்கு 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க மேலும் 2 ஆண்டுகால அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.