காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழில் அரசியல் வாதிகள் சிலர் கைவிட்டு இருந்தமை உறவினர்கள் இடையில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர்.
இதேவேளை வேலை கோரி பட்டதாரிகளும் மாவட்ட செயலகம் முன்பாக கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்ட களத்திற்கு வருகை தந்த தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான விந்தன் கனகரட்னம் , ச.சுகிர்தன் , க.சர்வேஸ்வரன் . மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்காது வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இணைந்திருந்தனர்.
அந்நிலையில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாத்திரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். ஒருகட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சுற்றி காவல்துறையினர் முற்றுகையிட்டு இருந்த வேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவனை தவிர ஏனைய அரசியல்வாதிகள் அவ்விடத்திற்கு விரைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மாத்திரம் தொடர்ந்து வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் அமர்ந்திருந்தார்.