Home இலங்கை மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

by admin

தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப்போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக்கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு போராட்டக் காலமாகவே மாறியிருக்கிறது.

தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சியும் இப்போராட்டங்களை அருட்டியிருக்கிறது. ஜல்லிக்கட்டு எழுச்சி எனப்படுவது அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது தமிழகத்தில் கொதித்தெழுந்த மாணவர் போராட்டங்களின் தொடர்ச்சிதான் எனலாம்.    ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டி நிகழ்ந்த எழுச்சிகளை 2009 மேக்குப் பின்னரான பொதுத்தமிழ் உளவியலின் தர்க்கபூர்வ வளர்ச்சி எனலாம்.

இப்பொழுது ஈழத்தமிழ்ப் பரப்பில்  நிகழ்ந்து வரும் போராட்டங்களை தமிழகத்தின் எழுச்சிகளால் அருட்டப்பட்டவை என்று கூறலாம்.  அதற்காக,வவுனியாவிலும் கேப்பாபுலவிலும், பரவிப்பாஞ்சனிலும், வலிகாமத்திலும் மக்கள் இப்பொழுதுதான் போராட ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறமுடியாது.  ஆட்சி மாற்றத்திற்கும் முன்னரே அவர்கள் சிறிய அளவில் போராடியிருக்கிறார்கள்.

அந்நாட்களில் அப்போராட்டங்களை பெரும்பாலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அல்லது செயற்பாட்டியக்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை முன்னெடுத்தன. அப்போராட்டங்களில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்தார்கள். அந்தப் போராட்டங்களில் பெரும்பாலும் ஒரே முகங்களையே தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.  அப்போராட்டங்களில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை விடவும் அப்போராட்டங்களைச் செய்தியாக்க வந்த ஊடகவியலாளர்களின் தொகை சில சமயங்களில் அதிகமாகவிருந்தது.  அதைவிட முக்கியமாக அப்போராட்டங்களை கண்காணிக்க வந்த புலனாய்வாளர்களின் தொகை மிக அதிகமாயிருந்தது.  ராஜபக்ஷக்களின் காலத்தில் தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்று நன்கு தெரிந்திருந்தும் சிறுதொகை மக்கள்  துணிச்சலாகப்போராடிய களங்கள் அவை.

எனவே இப்பொழுது தமிழர் தாயகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் இப்பொழுதுதான் தொடங்கப்பட்டவை என்பதல்ல.  அவை ஏற்கனவே தொடங்கப்பட்டவைதான். ஆனால் ஆட்சி  மாற்றத்தின் பின் அவை முடுக்கி விடப்பட்டுள்ளன.  மாற்றத்தின் விரிவையும் நிலைமாறுகால நீதியின் விரிவையும் சோதிக்கும் களங்களாக அவை மாறியிருக்கின்றன.

இப்போராட்டங்களில் அநேகமானவற்றை அரசியல் வாதிகள் வழிநடத்தவில்லை.  ஆனால் அதற்காக இவை அரசியல்வாதிகளை நீக்கிய போராட்டங்கள் என்று கூறமுடியாது.  தமிழகத்து எழுச்சிகளுக்கும் ஈழத்து எழுச்சிகளுக்கும் இடையில் உள்ள ஒரு வேறுபாடு இது.  இப்போராட்டங்களை அரசியல் வாதிகள் தொடங்காவிட்டாலும் போராட்டக்களத்தில் அரசியல்வாதிகளைக் காணமுடிகிறது.  அது மட்டுமல்ல போராட்டத்தை முடித்து வைக்கும்போது அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் இடைத் தொடர்பாளர்களாகவும் அரசியல் வாதிகளே செயற்படுகிறார்கள்.

இவ்வாறான போராட்டங்களில் அரசியல்வாதிகள் அதாவது மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கெடுப்பதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு.

1.    போராட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையில் உள்ள நல்லுறவு.
2.    தமது தலைமைத்துவம் பறிபோகக் கூடும் என்ற பயம் காரணமாகவும் சில அரசியல்வாதிகள் அழையா விருந்தாளிகளாக உள்நுழைகிறார்கள்.  அல்லது அப்போராட்டக்களத்துக்குப் போய் வரவைப் பதிவு செய்கிறார்கள்.
3.    ஒரு கட்சியின் பின்னணியுடன் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் மற்றொரு கட்சி தானும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பது.
4.    ஒரு போராட்டத்தை பார்த்து  அரசியல் வாதிகள் இதுபோல தாமும் தமது செல்வாக்குப் பிரதேசத்தில் மற்றொரு போராட்டத்தைத் தூண்டிவிடுவது.
5.    அரசாங்கம் இவ்வாறு தமிழ் அரசியல் வாதிகள் இடைத் தொடர்பாளர்களாக உள்நுழைவதை ஊக்குவிப்பது.
மேற்படி காரணங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.  முதலாவதாக வவுனியாவில் நடந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம். அதை முன்னெடுத்த அமைப்பினர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சில அரசியல் வாதிகளோடு நல்லுறவைக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் போராட்டத்தைத் தொடங்கியபோது அதை அந்த அந்த அரசியல்வாதிகளுக்கு அறிவித்திருக்கவில்லை.

‘எங்களுக்கும் சொல்லியிருக்கலாமே?’ என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டிருக்கிறார். ஆனாலும் தங்களைத் தலைமை தாங்க அழைக்காத போதிலும் கூட அதை ஒரு கௌரவப் பிரச்சனையாக எடுக்காது சிவசக்தி ஆனந்தனும், மயூரனும் உண்ணாவிரதிகளுக்குத் உதவியிருக்கிறார்கள்.  உண்ணாவிரதிகளுக்குத் தேவையான தற்காலிகக்குடிலை அமைப்பதற்கு வேண்டிய அனுமதியை பெற்றுக் கொடுப்பது முதற்கொண்டு பல்வேறு விதங்களிலும் அவர்கள் உதவியிருக்கிறார்கள்.

உண்ணாவிரதம் கொதி நிலையை அடைந்த போது மன்னாரைச் சேர்ந்த வர்த்தகரான  ஒர் அரசியல்வாதி வவுனியா வர்த்தக சங்கத்துக்கூடாக உள்நுழைய முற்பட்டதாக உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள்.  வர்த்தக சங்கத்தின் அணுசரனையோடு ஒரு ஏற்பாட்டுக்குழுவை உருவாக்குவது அவருடைய நோக்கம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.  தமிழரசுக்கட்சியின் மேலிடத்திலிருந்து  மேற்படி அரசியல் வாதிக்கு ஏதும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்லாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் ஏற்கனவே ஒரு ஏற்பாட்டுக்குக்குழு இருக்கத்தக்கதாக புதிதாக ஒன்றை உருவாக்கத்தேவையில்லை என்று கூறி அந்த நகர்வை உண்ணாவிரதிகள் தடுத்துவிட்டார்கள்.

அதேசமயம், ஒரு என்.ஜீ.யோ அலுவலரும் உண்ணாவிரதிகளையும் ஏற்பாட்டாளர்களையும் பிரித்துக் கையாள முற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் உண்ணாவிரதத்துக்குள் நுழைந்து உண்ணாவிரதிகளைப் பிரித்தெடுத்து கையாள முற்பட்டதாக ஒரு ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.  எனினும் இத்தலையீடுகள் எல்லாவற்றையும் தாண்டி உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.  முடிவில் அலரிமாளிகைச் சந்திப்பின் போது அரசாங்கம் கூட்டமைப்பு பிரதானிகளை இடைத்தொடர்பாளர்களாக உள்ளே கொண்டு வந்தது.  ஆனால் போராட்டக்காரர்கள் விடாப்பிடியாக அதைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

ஆனால் பிலக்குடியிருப்புப் போராட்டத்தில் கூட்டமைப்பினர்தான் இடைத்தொடர்பாளர்களாகச் செயற்பட்டிருக்கிறார்கள்.  அரசாங்கத்துடன் இது தொடர்பாகப் பேசி ஒரு முதல்கட்டத்தீர்வை அவர்களே பெற்றிருக்கிறார்கள்.  இது விடயத்தில் போராடிய சனங்களுக்கும் அரசபிரதிநிதிகளுக்கம் இடையில் சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.

பிலக்குடியிருப்புப் போராட்டத்திலும் அரசியல் வாதிகள் தலைமை தாங்கவில்லை.  ஆனால் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அந்தக் களத்திலேயே அதிகம் காணப்பட்டார். போராடிய மக்களுக்கு உதவிகளைச் செய்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும்  அங்குகாணப்பட்டார்.  பிலக்குடியிருப்புச் சனங்கள் வீதியோரத்தில் இரண்டு படைமுகாம்களுக்கு இடையில் தங்கியிருந்து போராடினார்கள்.  இரவில் காட்டு விறகை எரித்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் உருவாக்கினார்கள்.  இரவில் தங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்  என்பதனால் யாராவது  ஒரு மக்கள்  பிரதிநிதி ஒவ்வொரு நாளும் தங்களுடன் வந்து தங்க முடியுமா? என்று ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டிருக்கிறார்கள்.  உங்களுடைய போராட்டத்தை பின்னிருந்து ஊக்குவிக்கும் அரசியல் வாதிகளைக் கேளுங்கள் என்று பதில் தரப்பட்டதாம்.

புதுக்குடியிருப்பு போராட்டம் ஒரு விதத்தில் பிலக்குடியிருப்புப் போராட்டத்தின் விளைவுதான்.  நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அங்கு அடிக்கடி காணப்பட்டார்.  தனது செல்வாக்குப் பிரதேசத்தில் அப்படியொரு போராட்டம் முன்னெடுக்கப்படுவதை அவர் ஊக்குவித்திருக்கிறார்.  எனினும் தொடக்கத்தில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அரசாங்கத்தை முழுமையாகப் பகைக்காமல் போராட வேண்டும் என்று கருதியதாக அவர்களைச் சந்தித்த  மன்னாரைச் சேர்ந்த ஒரு அரசியல் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.  ஆனால் பிலக்குடியிருப்புப் போராட்டத்தின் பின்னணியில் புதுக்குடியிருப்பு மக்களும் உறுதியான விட்டுக்கொடுப்பற்ற முடிவுகளை எடுக்கத் தொடங்கினார்கள்.

கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் போராட்டத்தின் பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே நின்றது.  சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்க முற்பட்ட அக்கட்சி ஆள் ஒருவர் கைது செய்யப்பட்டு பல மாத கால புனர்வாழ்வுக்கு பின் விடுவிக்கப்பட்டார்.  இம்முறையும் அப்போராட்டத்தின் வெற்றிக்கு அக்கட்சிதான் உரிமைகோர முடியும்.

பரவிப்பாஞ்சான் போராட்டக்களத்துக்கு அருகிலேயே மற்றொரு களம் திறக்கப்பட்டது.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டம் அது. கிளிநொச்சி மாவட்டத் தமிழரசுக் கட்சியினரே மேற்படி போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.  கிளிநொச்சியில் அண்மை வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை பெரும்பாலும் கட்சிகளே ஒருங்கிணைத்து உதவி ஒத்தாசைகளை வழங்கி வருகின்றன.

மேற்கண்ட அனைத்தையும் தொகுத்து பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது.  ஈழத்தமிழ்ப்பரப்பில் தன்னெழுச்சியாகக் கிளர்ந்த போராட்டங்களை அரசியல் வாதிகள் வரவேற்கிறார்கள்.  அதில் ஈடுபடுகிறார்கள்.  சில சமயங்களில் அரசாங்கத்துக்கும் மக்களுக்குமிடையில் இடைத்தொடர்பாளர்களாகச் செயற்படுகிறார்கள்.  அல்லது அரசாங்கம் அவர்களை அவ்வாறு இடைத்தொடர்பாளர்களாக உள்நுழைக்கின்றது.  சில சமயங்களில் அரசியல் வாதிகள் போராட்டத்தைத் தத்தெடுக்க எத்தனித்தாலும் அது வெற்றியளிக்கவில்லை.  ஆனால் தீர்வு என்று வரும்போது தவிர்க்கவியலாதபடி அரசியல் வாதிகளே இடைத்தொடர்பாளர்களாக மாறுகிறார்கள்.

இது விடயத்தில் ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.  யாழ்ப்பாணத்தில் அண்மை நாட்களாக வேலையற்ற பட்டதாரிகள் போராடத்தொடங்கியிருக்கிறார்கள்.  யாழ்.கச்சேரிக்கு முன்பாக A9 நெடுஞ்சாலையின் ஓரத்தில் அவர்கள் தற்காலிகக் கொட்டகைகளை அமைத்து அங்கேயே சமைத்து சாப்பிடுகிறார்கள்.  இந்தப் போராட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருகையைப் பதிவு செய்து வருகிறார்கள்.  அதில் ஒருவர் பட்டதாரிகளிடம் பின்வரும் தொனிப்படக் கூறியிருக்கின்றார ‘நீங்கள் இதிலிருந்து போராடுங்கள் நானும் உங்களுடன் வந்து அமர்ந்திருக்கிறேன் சில நாட்களில் அரசுத் தலைவர் மைத்திரி  இந்த வழியால் வருவார். நான் உங்களுடன் இருப்பதைக் காணுவார். அப்பொழுது நான் அவருடன் உங்களுடைய பிரச்சனைகளைப் பற்றிக் கதைப்பேன்’ என்று. இச்செய்தி சமூகவலைத்தளங்களில் ஒருவித எள்ளலுடன் பரிமாறப்பட்டு வருகிறது.

எனினும், இதில் ஒரு நடைமுறை உண்மை உண்டு.  இப்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் போராடும் போது அவர்களுடைய பிரதிநிதிகள் அந்தப் போராட்டக் களங்களுக்குப் போய் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று பிரகடனப்படுத்தி வருகிறார்கள்.  போராட்டங்களுக்கு வருவதை ஒரு துடக்காகக் கருதும் உயர்மட்ட தமிழ் அரசியல் வாதிகள் கூட அந்த மக்களின்  சார்பாக அரசாங்கத்துடன் பேசி வருகிறார்கள்.தலைவர்கள் முன்னே செல்லத் தவறிய போதிலும் உலகம் அவர்களைத்தான் போராடும் மக்களின் பிரதிநிதிகளாகப் பார்க்கிறது.

ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கின்றது.  இந்த அரசியல் வாதிகளை தெரிந்தெடுத்த அந்த மக்களே அந்த அரசியல் வாதிகளை பின் தள்ளிவிட்டு தாமாகப் போராடுவது ஏன்? அந்த அரசியல் வாதிகளில் நம்பிக்கையில்லை என்றால் அவர்களுக்கு ஏன் வாக்களித்தார்கள்?  அரசியல் வாதிகளை நீக்கி விட்டுப் போராடிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இறுதியில்  சட்டமியற்றுவதற்கு அந்த அரசியல் வாதிகள் தானே தேவைப்பட்டார்கள்?  இது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் உள்ள போதாமைகளைக் காட்டுகிறதா?

இந்த வகைப் போராட்டங்களின் இறுதிக்கட்டம் எது என்பதை அரசாங்கமும் அந்த மக்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளும் தீர்மானிப்பதைத்தான் அரசாங்கமும் விரும்பும். மக்கள் பிரதிநிதிகளும் விரும்புவர்.  நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியில் ஒரு புதிய செயற்பாட்டு அரசியல் அல்லது மக்கள் இயக்கம்  உருவாகுவதை அரசாங்கம் விரும்பாது.  தன்னுடன் அதிகம் ஒத்துழைக்கும் மக்கள் பிரதிநிதிகள் இடைத்தொடர்பாளர்களாகச் செயற்படும் போது போராட்டதின் வெற்றிச் செய்தியை அவர்களுக்கூடாக வெளிப்படுத்தவே அரசாங்கம் விரும்பும்.

குறிப்பாக ஜெனிவாக்கூட்டத் தொடரின் பின்னணியில் போராடும் மக்களுக்குத் ஏதோ ஒரு தீர்வைக் கொடுப்பதை அரசாங்கமும் விரும்பும்.  இந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் வெளித்தரப்புக்களும் விரும்பும்.

அதே சமயம் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் போதியளவு நிறுவனமயப்படவில்லை. அவர்களுக்கு அரசியல் நெளிவு சுழிவுகளும் சூழ்ச்சிகளும் தெரியாது என்பதுதான் அவர்களுடைய பலம்.  ஆனால் அதுதான் அவர்களுடைய பலவீனமும். இந்த பலவீனத்தை அரசாங்கமும்;  கையாளும், அந்த மக்களுடைய தலைவர்களும் கையாள்வர். என்.ஜீ.யோக்களும் கையாளும்.

அதனால், போராடும் மக்கள் தங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நிறுவனமயப்படுத்த வேண்டும்.  மார்க்சிய வாதிகள் கூறுவது போல புரட்சிகரமான ஒரு சித்தாந்தம் இல்லையென்றால் புரட்சிகரமான ஒரு கட்சியோ அல்லது அரசியல் இயக்கமோ இல்லை.  புரட்சிகரமான ஒரு கட்சியோ அல்லது இயக்கமோ இல்லாமல் புரட்சிகரமான அரசியலும் இல்லை.

எனவே தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டத்தை குறித்தும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் போதாமைகளைக் குறித்தும் செயற்பாட்டு அரசியலை அடித்தளமாகக் கொண்ட பங்கேற்பு ஜனநாயகத்தின் அவசியத்தைக் குறித்தும் தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்கவும் தர்க்கிக்கவும் வேண்டிய ஒரு வேளை இது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More