யாழ்.குடாநாட்டில் காணப்படும் நீர் பிரச்சனையை தீர்க்கும் எண்ணத்துடன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வடமாகாண சபையில் முன் வைக்கபட்ட முன்மொழிவு அறிக்கை தொடர்பில் இதுவரை மாகாண சபையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடாநாட்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் முகமாக இரணைமடு திட்டம் , கடல் நீரை நன்னீர் ஆக்கும் திட்டம் மற்றும் ஆறுமுகம் திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் உள்ளன. இரணைமடு திட்டம் கிளிநொச்சி மக்களின் எதிர்ப்பினாலும் , கடல்நீரை நன்னீர் ஆக்கும் திட்டம் வடமராட்சி கிழக்கு மக்களின் எதிர்ப்பினாலும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
அந்நிலையில் கடந்த 28.04.2014ஆம் திகதி விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் , யாழ்.குடாநாட்டில் உள்ள நீர்நிலைகளை உரிய முறையில் முகாமை செய்வதன் மூலம் குடாநாட்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என ஒரு திட்டத்தின் முன் மொழிவு அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார்.
அதன் போது அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இது ஒரு திட்ட முன்மொழிவு அறிக்கை இந்த திட்டம் தொடர்பில் பின்னர் ஆராய்ந்து விவாதித்து முடிவு எடுப்போம் என தெரிவித்து இருந்தார். அந்நிலையில் தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவுற உள்ள நிலையில் இதுவரை குறித்த திட்டம் தொடர்பில் தற்போதைய நிலவரம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
வடமாகாண சபையில் நேற்றைய தினம் வடமாகாணத்தில் காணப்படும் நீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கும் விசேட அமர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.