கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன ஒரு வாரத்துக்கு சபை அமர்வுகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என, சபாநாயகர் தெரிவித்ததை அடுத்து, கூட்டு எதிர்க்கட்சியினர் அமளியில்ஈடுபட்டதனையடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டமையால், அவரை வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
எனினும் தினேஸ் குணவர்த்தன தொடர்ந்தும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். தான் வெளியேற வேண்டுமாயின் சபையில் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டும் என தினேஸ் குணவர்த்தன தெரிவித்ததோடு தொடர்ந்தும்; சபையை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அவருக்கு ஒரு வாரம் தடை விதிக்க வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 114 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து லக்ஷ்மன் கிரியெல்லவின் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.