புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 12 ஆவது சந்தேக நபரின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினர் 12 ஆவது சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அவரின் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான அனுமதியினை கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான், தினமும் 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரையில் அவரிடம் விசாரணைக்களை மேற்கொள்ளவும், அத்துடன் வாக்கு மூலத்தினையும் பதிவு செய்யவும் அனுமதி வழங்கினார். அதனை தொடர்ந்து சந்தேக நபர்களிடம் நீங்கள் ஏதேனும் மன்றுக்கு தெரிவிக்க விரும்பு கின்றீர்களா என வினாவினார்.
அதற்கு பன்னிரண்டாவது சந்தேக நபர் மாத்திரம்’ என்ன குற்றம் செய்தேன் என்றோ என்ன குற்றத்திற்காக கைது செய்யபட்டு, எந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபப்ட்டு உள்ளேன் எனவோ தெரியாது என மன்றுக்கு தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நீதிவான் குற்றம் என்ன என்பது தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டு இருக்க வேண்டும் மற்றும் இலங்கை சட்டத்தின் அடிப்படையில் தான் தடுத்து வைக்கப்பட்டு உள்ளீர், இலங்கை பிரஜை எவரும் தமக்கு இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டம் தெரியாது என கூற முடியாது. என கூறினார்.
அதன் போது குறித்த 12 ஆவது சந்தேக நபர்’ குற்றம் என்ன என்று தெரியாதததால் தான் கேட்கிறேன்’ என உரத்த குரலில் நீதிவானிடம் கூறினார். அவ்வாறாக நீதிவானின் கூற்றுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டமையை அடுத்து குறித்த நபரின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமாறு நீதிவான் கட்டளையிட்டார்.