காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இந்த அலுவலகம் காணாமல் போனவர்கள் தொடர்பான தெளிவான விபரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த கேள்விகளுக்கு பதில் வழங்குகையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோரின் உண்மையான எண்ணிக்கையை அறிந்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு என குறிப்பிட்டுள்ள அவர், எத்தனை பேர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றார்கள் என்பது தொடர்பிலும் அறிந்து கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையிலும் சிலர் படகு மூலமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி எடுத்திருந்தனர் எனவும், இந்த விபரங்களை அறிவதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் உதவியாக இருக்கும் என்றும், இந்த அலுவலகத்தை ஏப்ரல் மாதமளவில் உருவாக்க முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிதுள்ளார்.