திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும், அது சார்ந்த 378 ஏக்கர் நிலப் பரப்பையும் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை பொது மக்களுக்கு பல்வேறு இடர்களை எற்படுத்திவரும் கிட்டங்கிப் பாலத்தை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் தெரிவித்த அவர் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கரையோரப் பிராந்தியத்தையும், நாவிதன் வெளி படுவான்கரைப் பிராந்தியத்தையும் இணைக்கின்ற கேந்திர முக்கியத்துவம் பெற்ற கிட்டங்கிப் பாலம் பல தசாப்த காலமாக எவ்விதப் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், வெள்ளம் ஏற்படுகின்ற அனைத்துக் காலங்களிம் தொடர்ந்து இரண்டு, மூன்று பேர் பலியாகி வருவதாகவும், விவசாயம், கல்வி, போக்குவரத்து, பொருளாதாரம், சுகாதாரம் என பல துறைகளிலும் பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.