ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து முறைப்பாடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈழ ஆதரவு புலம்பெயர் தரப்புக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் முன்னிறுத்தி கேள்வி எழுப்பப்பட வேண்டுமென்ற இந்த ஆவணத்தில், பதினொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கையொப்பமிட்டுள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம், பிரான்ஸ் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் காங்கிரஸ் மற்றும் ஐரோப்பிய தமிழர் பேரவை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முறைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நிராகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இவ்வாறான ஓர் யோசனைத் திட்டத்தினை ஒரு போதும் ஆதரிக்காது எனவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.