Home இலங்கை கல்வி அதிகாரி திருந்துவாரா? ‘காதோடு காதாக’ அராலியூர் குமாரசாமி

கல்வி அதிகாரி திருந்துவாரா? ‘காதோடு காதாக’ அராலியூர் குமாரசாமி

by admin

‘செயலாளர் என்றால் பெரிய பதவியா? சிறிய பதவியா? அண்ணை.’ என்று கவுண்டமணியை செந்தில் கேட்பது போல பாடசாலை பக்கம் போகாத எனது நண்பன் என்னிடம் கேட்டான். நானோ ‘செயலாளர் என்பது பதவியல்ல அவர் செய்யும் கடமையில் இருக்கிறது.’ என்றேன். அவனோ ‘உங்க ஒருவர் ஓடித்திரிகிறார் வீ…வீ…வீ……..என்று ரயர் தேய ஒருவர் வாகனத்தில மாவட்டம் தாண்டி ஓடித்திரிகிறார் இவரை விட இவரின் மனைவி தான் இவரின் வேலைக்கு கொடுத்த அரச வாகனத்தில ஓடித்திரிகிறார். இந்திரன் தான் வழிவிட்டிருப்பார் என்று நினைக்கிறன்’; என்றான் யாரடா அந்த இந்திரன் என்று கேட்க முன்னர் பாடசாலை பக்கம் போகாத அவன் பறந்து சென்று விட்டான்.

வேட்டி உரிய உரிய ஓடியவர்களின் கதை தொட்டி பட்டியெல்லாம் இருக்குது பாருங்கோ. ஆனால் வேட்டி ஒன்றைப் பெறுவதற்காக 100 கிலோ மீற்றர் தாண்டி ஓடிப் போய் வந்த ஒரு கல்வி அதிகாரியின் கதையைக் கேட்டிருக்கிறியளா. யாழ்ப்பாணத்தில இந்த அதிசய சம்பவம் ஒன்று நடந்திருக்குது. நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்கு வேட்டி இவரிடம் இல்லையாம். அன்று ஞாயிற்றுக்கிழமை புடைவைக் கடைகளும் பூட்டு அதனால் இவர் வீடு இருக்கும் வவுனியாவிற்கு தனது வேலைக்கு வழங்கப்பட்ட வாகனத்தில சென்று வேட்டி எடுத்து வந்துள்ளாராம். 1500 ரூபாய் வேட்டி ஒன்றைப் பெறுவதற்காக 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வேட்டி ஒன்றைப் பெற்றுள்ளேன் என்று விசாரணைப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

இவர் அரச வேலைக்காக பயன்படுத்தும் வாகனம் அலுவலக வேலை நிமிர்த்தமின்றி தனது தனிப்பட்ட தேவைக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வவுனியா சென்று வந்திருக்கிறது. இந்த வாகனத்தில் இவர் செல்லவில்லை இவரின் மனைவி சென்று வந்துள்ளார். இந்தப் போக்குவரத்துச் செலவு தான் 12 ஆயிரம் ரூபாய் என்று கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இந்த கணக்கு சம்பந்தமாக விசாரணைப் பிரிவு இந்த அதிகாரி மீது விசாரணை நடத்திய போது இவர் கூறிய காரணங்கள் தான் இவையாகும். ஆனாலும் என்ன இவர் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது தான் கவலை தரும் விடயமாகும். இனியென்ன இவரின் மனைவி அடிக்கடி வவுனியா வீட்டுக்குச் சென்று வந்து பல காரணங்களைக் கூறலாம் தானே.

களவை பிடிபடாமல் செய்ய வேண்டும் களவில் ஈடுபடுபவரே தன்னை இலகுவாக பிடிக்கக் கூடிய வகையில் அதாவது ஒரு வடிவேலுவின் படத்தில் 100 ஆவது களவை மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று வடிவேலுவின் தோழர்கள் எண்ணினர். 100 ஆவது களவு எந்த வீட்டில் இடம்பெறப் போகிறது எந்த நாளில் இந்த நேரம் என்று போஸ்ரர் அடித்து அந்தப் போஸ்ரரை தெருவெல்லாம் ஒட்டியது மட்டுமல்ல பொலிஸ் வாகனத்திலும் ஒட்டிவிடுகிறார்கள். அன்று இரவு இந்த விடயம் தெரியாத வடிவேலு தனது தோழர்களுடன் சென்று வீட்டின் கதவை கள்ளச் சாவி போட்டு திறந்த போது வீட்டின் உள்ளே ஏராளமான பொலிஸ்காரர்கள் நின்று இவர்களைப் பிடிக்கின்றார்கள். அப்பொழுது தான் வடிவேலுவிற்குத் தெரியவருகிறது. ஒரு இடமும் விடாமல் எல்லா இடங்களிலும் போஸ்ரர் ஒட்டியிருப்பது. இதேபோல் தான் இந்த அதிகாரியும் தனது களவை தானே பிடித்துக் கொடுக்கும் அளவில் இந்தக் காரணத்தை கூறியுள்ளார்.

இது மட்டுமா இந்த அதிகாரியால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது கல்விச் சூழல். தனது களவை மேலும் விருத்தி செய்ய வவுனியாவில் இருந்து தனது களவுக்கு உதவியாக ஒருவரை வலிகாமப் பகுதியொன்றில் உள்ள கல்வி அலுவலகத்தில் கொண்டு வந்து தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் போட்டுள்ளார். இவர் வவுனியாவில் பல ஏக்கர் காணிகளை குறைந்த விலையில் பொது மக்களிடம் வாங்கி அதிகாரிக்கு கொடுத்துள்ளாராம். இந்த விசுவாசத்தில தான் இவர் செய்யும் நிர்வாக சீர்கேட்டை இந்த அதிகாரி கண்டு கொள்வதில்லையாம்.  கோகுலகண்ணா வெண்ணையைத் திருடியது போல இவரும் தனது வேலையைக் காட்ட வெளிக்கிட்டார். அதாவது வலிகாமப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு சைக்கிள் கொட்டகை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்த சைக்கிள் கொட்டகை போட்ட கணக்கு வழக்கை இவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கூடாக மேற்கொண்டு பிடிபட்டும் இந்த அதிகாரி இவரை அதில் இருந்து விடுவித்துள்ளார். பிறகென்ன சொல்லவா வேண்டும் இவரின் சீர்கேடான செயற்பாடு தங்குதடையின்றி தொடர்கிறது.

இந்த அதிகாரியால் கல்விச் செயற்பாடுகள் சீர்கெட்டுப் போகின்றன. அதிபர்கள் ஆசிரியர்கள் நியமனம் இடமாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு இவர் தான் காரணமாக அமைகின்றார். யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அதிபர் நியமனத்தில் இவரின் குழறுபடி காரணமாக இன்னும் அந்தப் பாடசாலைக்கு அதிபர் வரவில்லை. இதனால் இரு நாள் அந்தப் பாடசாலை மூடப்பட்டும் இப்பொழுது மாணவர் வரவு குறைவாகவும் இருப்பதால் அந்தப் பாடசாலை இயங்க மறுக்கிறது. இந்தப் பிரச்சினையை சீர்படுத்தாமல் இந்த அதிகாரி வெளிநாடு சென்றுள்ளார் என்றால் கல்விக்கு இவர் பொருத்தமில்லாதவர் என்று தானே சொல்ல வேண்டும்.

இவர் கல்வி அதிகாரியாக வரமுதல் வேறொரு துறையில் பணிப்பாளராக இருந்து இவர் செய்த சீர்கேடு காரணமாக இந்தத் துறைக்கு மாற்றப்பட்டு இப்பொழுது இவரால் கல்வித்துறையும் சீர்கெட்டுப் போகிறது. அதாவது பணிப்பாளராக இருந்த காலப் பகுதியில் தனக்கு கீழ் உள்ள வேலைக்கான நியமனத்தில் 800 பணியாளர்களை தெரிவு செய்து எடுத்த நியமனத்துக்கு ஒவ்வொருவரிடமும் இருந்து இலட்சக் கணக்கில் பணம் வாங்கியதாக இவரின் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மேலும் வடமாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கென்று கொண்டு வரப்பட்ட அம்புலன்ஸ்களில் ஒன்றை விற்று தனக்கு வாகனம் ஒன்றை வாங்குவதற்காக கண்டி சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைய காலப் பகுதியில் இவரின் மனைவி ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு சேவை செய்கிறாரோ இல்லையோ 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் சேவைக்காலம் முடிய முதல் இடமாற்றம் கோரும் ஆசிரியர்களை இடமாற்றிவிடும் தரகர் வேலையையும் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனுக்கு ஏற்ற மனைவி. இந்தப் பொருத்தம் அமைவது கஷ்ரம். இன்று இவரைத் தான் கல்விக்கு அதிகாரியாக போட்டிருக்கிறார்கள். பிறகென்ன கல்வி நொந்து நூழாகிப் போய்க் கொண்டிருக்கும் தானே என்ன சந்தேகம்.

கல்வித்துறைக்கு பொறுப்பான அமைச்சரோ இரவானால் தண்ணியை அடித்துவிட்டு படுத்துவிடுவார். பகலானால் அந்த போதையைப் போக்க பகல் நேரம் சரியாகி விடும். பிறகு எப்படி இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைப் பெற நேரம் கிடைக்கும். அமைச்சராக வந்ததில் இருந்து இன்று வரை இவர் செய்த நல்ல விடயம் பூப்புனித நீராட்டு திருமண பிறந்தநாள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு கழுத்தில் மாலை அணிவித்தது தான் கல்வி முன்னேற்றத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை. அதனால் தான் இன்று கல்வி 9 ஆம் இடத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More