172
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனால் , இரண்டவாது சந்தேக நபரின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு எடுப்பதற்கு காவல்துறையினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.
அதன் போது சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இரத்த மாதிரிகளை எடுப்பதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து எதிர்வரும் 21ம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று இரத்தமாதிரிகளை எடுக்க பணித்தார். கடந்த மாதம் 23ம் திகதி முதலாவது சந்தேக நபரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த படுகொலை தொடர்பில் முதல் முறைப்பாட்டாளரிடம் இருந்து விசாரணைகளை முன்னெடுத்து இருக்க வேண்டும். அவர்களின் வாக்கு மூலத்தை காவல்துறை பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் அவற்றை செய்யவில்லை.
கண்கண்ட சாட்சியமாக கூறப்படும் சிறுவன் முறைப்பாட்டாளர் இல்லை. சிறுவனின் தாயும் முறைபாட்டாளர் இல்லை. கொலை தொடர்பில் முதலில் காவல்துறையினருக்கு அறிவித்தவரே முதல் முறைபாட்டாளர் அவர்களிடமும் விசாரனைகள் மேற்கொள்ள வேண்டும். குறித்த இரு சந்தேக நபர்களையும் இலக்காக கொண்டு விசாரணைகளை முன்னெடுக்காது பரந்துபட்ட ரீதியில் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுக்க வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அத்துடன் கடந்த தவனைகளின் போது படுகொலை செய்யபப்ட்ட பெண்ணின் உடலில் இருந்து தடயங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவித்த காவல்துறையினர் தற்போது உடல்கூற்று பரிசோதனை அறிக்கையில் தலைமுடி உள்ளிட்ட சில தடய பொருட்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டு உள்ளதாக மன்றில் தெரிவித்து உள்ளமையையும் மன்றில் சுட்டிகாட்டினார்.
அதனையடுத்து நீதிவான் , விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுத்து செல்லப்படும்.என தெரிவித்து வழக்கினை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை இரு சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.
Spread the love