வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணையை எதிர்கட்சி தலைவர் வை.தவநாதன் சபையில் வைத்து கிழித்து வீசினார். வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. கடந்த சபை அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறை படுத்த வேண்டும் என கோரிய பிரேரணையை முன் மொழிந்தார்.
அன்றைய தினம் குறித்த பிரேரணை எடுத்துக்கொள்ள படாமல் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் என அவை தலைவர் அறிவித்து இருந்தார். அதன் பிரகாரம் இன்றைய அமர்வில் குறித்த பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் ‘ இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு உறுப்பு நாடுகளை கோருதல்’ என பழைய பிரேரணையில் உள்ளடக்கி பிரேரணையை சிவாஜிலிங்கம் முன் மொழிந்தார்.
அதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப் வெளியிட்டனர். அதன் போது எதிர்க்கட்சி உறுப்பினர் வை தவநாதன் கடந்த அமர்வில் முன் மொழிந்த பிரேரணை வேறு , இது வேறு. இந்த செயற்பாட்டின் மூலம் சிவாஜிலிங்கம் சபையை அவமதித்து உள்ளார் என தெரிவித்து சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை சபையில் கிழித்து வீசினார்.