ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வட மாகாண சபையின் பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட குறித்த பிரேரணை நாளை வியாழக்கிழமை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 88ஆவது விசேட அமர்வு நேற்று நடைபெற்றபோது வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு உறுப்பு நாடுகளை கோருதல் என்ற பழைய பிரேரணையில் உள்ளதனை உள்ளடக்கி பிரேரணையை முன் மொழிந்தார்.
இதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததனையடுத்து பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புடனும், ஆளும் கட்சியின் ஒப்புதலுடனும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.