2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து போன போது அப்பாவின் இரண்டு பாவிக்க முடியாத கால்களை விட்டிட்டு அப்பாவோடு போனனாங்கள.; திரும்பி வீட்டுக்கு வரேக்க நாங்கள் மட்டுமே வந்தனாங்கள். ஆனால் அவர் விட்டிட்டு போன இரண்டு கால்களும் கவனமாக இருந்தது. இப்ப அதுதான் அப்பாவின் நினைவாக எங்களிடம் இருக்கிறது மாமா என இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட செல்லையா விஸ்வநாதனின் மூத்த மகன் தர்சிகன் கண்கள் கலங்க குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பில் ஈடுப்பட்டு வரும் விஸ்வநாதனின் மனைவியான பாலநந்தினி வயது 37 என்பவரை சந்தித்து கணவர் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் வினவிய போது அவர் தனது மகன்களின் தந்தை மீதான ஏக்கங்களை குறிப்பிட்டார்.
இதனையடுத்து அவரது கனகாம்பிகைகுள வீட்டுக்குச் சென்ற போது விஸ்வநாதனின் மூத்த மகன் தர்சிகன் தந்தையின் கால் ஒன்றை துணி ஒன்றினால் துடைத்துக்கொண்டிருக்க இரண்டாவது மகன் மற்றொரு செயற்கை காலுடன் தமையனை வெறித்துக் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களின் தந்தையின் நினைவுகளை மீண்டும் உள்ளத்திலிருந்து கிளறுவது எமக்கு மனதிற்கு உறுத்தலாக இருந்தாலும் தவிர்க்க முடியாத நிலையில் தந்தை தொடர்பில் சிறுவர்களிடம் வினவினோம்
அப்பா இயக்கத்தில் இருந்தவர். லீவில் வீட்டுக்கு வரும் போது ஏலாத இந்த காலில்தான் சாரத்தை கட்டி ஒரு கதிரையில் காலை தூக்கி வைத்துக்கொண்டு எங்களை தொட்டிலுக்குள் உள்ள மாதிரி சாரத்திற்குள் வைத்திருப்பார். இப்ப அதை நினைக்கும் போது ஆசையாக இருக்கிறது. திரும்பவும் அப்பாவுடன் அப்படி சாரத்திற்குள் இருந்துகொண்டு விளையாட வேண்டும் போல் இருக்கிறது. அவருடன் கடைக்கும் கோயிலுக்கும் போக ஆசையாக இருக்கிறது. அப்பா முந்தி எங்களை அவரது நண்பரிகளின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போவார்.
அப்பா வீட்டுக்கு வந்தால் அன்று மாட்டிறைச்சி வேண்டி சமைச்சு தருவார். சிலநேரம் அவர்தான் பள்ளிக் கூடத்திற்கு கூட்டிக்கொண்டு போறவர். ஆனால் மாமா இப்ப அந்த சந்தோசம் எல்லாம் இ;ல்லை நாங்கள் எங்கையும் போறது இல்லை, வெளியால போனால் அப்பாக்களுடன் மற்ற பிள்ளைகள் வரும் போது எங்களுக்கு பார்க்க கவலையாக இருக்கும் எங்களுக்கும் அப்பாவுடன் பள்ளிக் கூடம் போக ஆசையாக இருக்கு மாமா அவர் கூட்டிக்கொண்டு போகும் போது பகிடிவிடுவார் சிரிச்சு சிரிச்சு கதைப்பார் ஆனால் இப்ப எதுவுமே இல்லை தனது உணர்வுகளை கூறிமுடித்தார் விஸ்வநாதனின் மூத்த மகன் தர்சிகன் தந்தை காணாமல் ஆக்கப்பட்ட போது தர்சிகனுக்கு ஆறு வயது
அப்பா நல்லா படிக்கச் சொல்லுவார்,ஆமிட்ட போகும் போது என்னை அம்மாவிடம் விட்டிட்டு அழுதவர் அதுமட்டும்தான் ஞாபகம் இருக்கிறது என்றார் இரண்டாவது மகன் பிரியந்தன் இவருக்கு தந்தை காணாமல் ஆக்கப்பட்ட போது வயது மூன்று.
அம்மாவை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது.தனியா இருந்துகொண்டு கஸ்ரப்படுகின்றார். நாங்கள் படிக்கிற பள்ளிக் கூடத்தில் பெரும் பாலும் வசதியானவர்கள்தான் படிக்கின்றார்கள். சில நேரம் பள்ளிக் கூட தேவைகளுக்கு காசு கேட்பார்கள் எல்லோரும் கொடுத்துவிடுவார்கள் ஆனால் எங்களிடம் இருக்காது. காசு இல்லை என்று சொல்ல வெட்கமாக இருக்கும் அம்மாவிடம் காசு இருக்காது என்றும் தெரியும் இருந்தாலும் அம்மாவிடம் கேட்பம்.
அம்மா தைக்கிறவ அதில கிடைக்கிற காசு சாப்பிட்டுக்கே காணாது. அப்படியிருக்க எங்கட செலவுக்கும் என அம்மா சரியா கஸ்ரப்படுகின்றரா. முhமா , அம்மம்மாக்களின்ர உதவிகளும் கிடைக்கும். அவர்களும் வசதியானவர்கள் இல்லை. அப்பா இருந்திருந்தால் எங்களுக்கு இப்படியான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது. நாங்களும் மற்ற பிள்ளைகள் போன்று இருந்திருப்பம், ஆசைப்பட்ட சாப்பாடுகள், ஆசைப்பட்ட பொருட்கள் என வேண்டி தந்திருப்பார். என மீண்டும் கூறினார் தர்சிகன்.
2009-05-08 ஆம் திகதி வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் அருட்தந்தை ஒருவருடன் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தில் ஏற்றிச் செல்லபட்டவர் செல்லையா விஸ்வநாதன். இன்று வரை எந்த தொடர்பு இல்லை நானும் பதியாத இடங்கள் இல்லை இனி இலங்கையில் பதிவதற்கு இடங்களே இல்லை எல்லா இடங்களிலும் பதிவுகளை மேற்கொண்டு தேடி வருகின்றேன். எனது பிள்ளைகள் அவரின் ஞாபகம் வரும் போதெல்லாம் அவர் விட்டுச் சென்ற கால்களை எடுத்து பார்க்கின்ற காட்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. பிள்ளைகளும் வளர்ந்து வரவர அவர்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது இதனை என்னால் பூர்த்தி செய்ய முடியாது இருக்கிறது. நான் ஒருபுறம் கணவனுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எல்லா போராட்டங்களிலும் கலந்துகொண்டு வருகிறேன் மறுபுறம் குடும்ப கஸ்ரத்தை நிவர்த்தி செய்யவும் போராடி வருகிறேன். எனது பிள்ளைகள் அப்பாவை காணாது எட்டு ஆண்டுகளை கடந்து வாழ்ந்து வருகின்றார்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அப்பா திரும்பி வருவார் என்ற எனது பிள்ளைகளின் நம்பிக்கை வீண் போகக் கூடாது என்பதே இப்போது எனது பிரார்த்தனை. என்றார் விஸ்வநாதனின் மனைவி பாலநந்தினி.