தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன . தமிழக சட்டப்பேரவையின் வரவுசெலவுத்திட்ட கூட்டத் தொடர் ஆரம்பமான முதல் நாளான இன்று 2017-18ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரவுசெலவுத்திட்டத்தை பேரவையில் தாக்கல் செய்வதற்கு சபாநாயகர் அனுமதி அளித்ததையடுத்து டி.ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதில் தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் 1 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி திறன் மேம்பாடு இயக்கத்திற்கு 150 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கவும், இத்துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லவும் ; 7,000 கோடி ரூபாயை பயிர்கடனுக்காக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு 250 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
அத்துடன் ஏழைக் குடும்பங்களுக்கு 3.5 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் எனவும் 30 கோடி ரூபாய் செலவில் 49 புதிய காவல் நிலையங்கள் கட்டப்படும் எனவும் தமிழ்நாடு சிறப்பு காவலர் இளைஞர் படையில் 10 ஆயிரத்து 500 பேர் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் தெரிவித்தார்