நாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஹம்பாந்தோட்டை புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை மக்களின் காணி உரிமையை உறுதிசெய்யும் ‘ரன்பிமக்க உருமய’ காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
விவசாய நாடாக எமது நாட்டிலுள்ள காணிகளை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சரியாகப் பயன்படுத்துவது அவசியமானதாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கு அது மிகவும் முக்கியமான காரணியாகும் எனவும் தெரிவித்தார்.
மனித உரிமையான காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாரபட்சமாக நடந்துகொள்ள வேண்டாமென ஜனாதிபதி இதன்போது அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கெண்டார்.
ஒவ்வொருவரது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அல்லாமல் நாட்டுக்குப் பொதுவான அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக இன்று நாட்டில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய தடைகள், சவால்கள் வந்தபோதும் அந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகக் குறிப்பிட்டார்.