ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இந்த அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டன்கிரோ உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென குறித்த நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென அந்த நாடுகள் கோரியுள்ளன. இதுவரையில் உத்தேச வரைவுத் திட்டமே வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.