படையினரைக் காட்டிக் கொடுக்கும் மிக மோசமான ஆவணம் முன்னாள் உயர் இராணவ அதிகாரி கமல் குணரட்னவின் நூலாகும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். “ரனமகே ஒஸ்ஸே நந்திக்கடல்” என்னும் நூலில் படையினரை காட்டிக் கொடுக்கும் வகையிலான கருத்துக்களே உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்து வருகின்ற நிலையில், இந்த நூல் படையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினர் குற்றம் இழைக்கவில்லை எனவும், குற்றம் இழைத்த ஒரு சிலர் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
சக படைவீரர் ஒருவர் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத படையினர் பழிவாங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் தனியார் சொத்துக்களை அழித்து சட்டவிரோதமாக செயற்பட்டதாகவும் அதனை பார்த்த தமக்கு திருப்தி ஏற்பட்டதாகவும் கமல் குணரட்ன தனது நூலில் கூறியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கமால் குணரட்ன ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இது சர்வதேச ரீதியில் ஆபத்தானது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.