தமிழ் முற்போக்கு கூட்டணியுடனான பேச்சுகள் முடிவுக்கு வந்து உடன்பாடு ஏற்படாமல், அரச பெருந்தோட்ட காணிகள் வெளியாருக்கும், ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்ககவும் பகிர்ந்து அளிக்கப்படாது என்ற உறுதிப்பாட்டை அரச பெருந்தோட்ட துறைசார்ந்த அமைச்சர் கபீர் ஹஷிம் உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவது இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார நோக்கில் காணிகள் பிரித்து கொடுக்கப்பட்ட பின்னரே, அவை ஏனைய நடவடிக்கைகளுக்காக பிரித்து கொடுக்கப்படும். இந்த நிலைப்பாடு தொடர்பான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இத்தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளின் பரப்பளவு தொடர்பில் தற்போது தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. இவை வீட்டு திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற ஏழு பேர்சஸ் காணியுடன் தொடர்பில்லாத வாழ்வாதார காணிகள் ஆகும்.
அமைச்சர்கள் கபீர் ஹஷிம், மலிக் சமரவிக்கிரம ஆகியோருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர்களுக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறும் எனவும் இதில் கண்டி மாவட்ட கூட்டணி எம்பி வேலுகுமாரும் கலந்துக்கொள்வார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்