எமது மக்கள் டெங்குவினால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்தாலும் மத்தியரசின் நிதிக்காக காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிண்ணியாவில் டெங்கு நோய்த்தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலை கட்டில்களை வாங்க நாம் மத்தியரசாங்கத்திடம் ஆயிரம் பத்திரங்களை வழங்கி பக்கம் பக்கமாக விளக்கம் கூறி நிதி கோர வேண்டிய நிலையே இன்றும் எமக்கு ஏற்பட்டுள்ளது. எமக்கான நிதிகள் வழங்கப்படாமையினால் மக்கள் இன்று எம்மை குறை கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரளைப்பற்று பிரதேச சபைக்கு ஒப்பந்த அடிப்படையிலான பொதுப்பணியாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண சுகாதாரத்துறைக்கு 98 வீதமான அதிகாரங்கள் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள போதும் அவை இன்று வெறும் எழுத்துக்களில் மாத்திரமே உள்ளதுடன் மாகாண சுகாதார அமைச்சுக்கு 10 வீதமான நிதியொதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது எனவும் அந்த நிதிக்குஇழவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.