தமிழகத்தின் இராமேஷ்வரம் – தங்கச்சிமடம் மீனவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலும் இரு மீனவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை இந்தவாரம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டுச்சம்பவத்துடன் கடற்படை தொடர்புப்படவில்லை என தெரிவித்துள்ள அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்காக சம்பவம் தொடர்பில் ஜிபிஸ் தொழில்நுட்பத்தின் ஊடான விசாரணையை முன்னெடுத்துள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே உறுதியளித்தது போன்று இவ்வாரம் இறுதியில் முழுமையான அறிக்கையை கையளிக்க முடியும் என கடற்படை; தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இதுவரையில் இந்திய தரப்பில் இருந்து ஜிபிஸ் தரவுகள் வழங்கப்பட வில்லை எனவும் சம்பவத்தின் உண்மை நிலைகளை கண்டறிய இந்திய தரப்பின் ஒத்துழைப்புகள் மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்படுகிறது.
எனவே மீனவர் பிரச்சினையை சுமூகமான முறையில் முடிவிற்கு கொண்டு வருவதற்கும் உண்மைகளை கண்டறிவதற்கும் இலங்கை – இந்திய மீனவர் நலன்புரி அமைப்பும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்துள்ளன.
இதனடிப்படையில் இராமேஷ்வரம் மீனவ பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் தலைமையில் இந்த பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைப்பின் அமைபபாளர் எஸ்.பி அந்தோனிமுத்து தெரிவித்தார்.