சட்டவிரோத ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதனால் மனித கடத்தல் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமாக வெளிநாட்டு செல்வதன் மூலம் சர்வதேசம் இலங்கையை மனித கடத்தல் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் நான்காவது முறையாகவும் இணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டுக்கு இவ்வாறு பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள இந்த செயற்பாட்டை கட்டுப்படுத்த தமது அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.